ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. என குறிப்பிட்டு மேடையில் பேச அழைத்த பா.ஜ.க.


ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. என குறிப்பிட்டு மேடையில் பேச அழைத்த பா.ஜ.க.
x
தினத்தந்தி 19 March 2024 2:38 PM IST (Updated: 19 March 2024 3:26 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளவர் பிரதமர் மோடி என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சேலம்,

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசினார். டாக்டர் ராமதாஸின் கைகளை பிடித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அப்போது மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று உற்சாக குரல் எழுப்பினர்.

ஓ. பன்னீர் செல்வத்தின் கைகளை பிடித்து சிரித்து நலம் விசாரித்து பேசினார் பிரதமர் மோடி. கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தனர். பிரதமர் மோடி வருவதற்கு முன்பு கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சில நிமிடங்கள் மட்டுமே பேசி முடித்தனர்.

அன்புமணி ராமதாஸ் பேசிய பின்னர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். பேசுவார் என அழைப்பு விடுத்தார். பா.ஜ.க வை சேர்ந்த கே.பி. ராமலிங்கம். அப்போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்றுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ்சை பேச அழைத்தபோது அ.தி.மு.க எனக்கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசிய ஓ.பன்னீர் செல்வம், பத்தாண்டு காலமாக பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை பிறப்பித்தவர் என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம். மேலும் இந்த நாட்டின் தங்கமாக, சிங்கமாக பிரதமர் மோடி இருக்கிறார் என புகழாரம் சூட்டினார். கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளவர் பிரதமர் மோடி என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடிக்கு சேலம் பொதுக்கூட்ட மேடையில் ஜவ்வரிசி, அர்த்தநாரீஸ்வரர் சிலை போன்றவை நினைவு பரிசளிக்கப்பட்டது.

1 More update

Next Story