அனல் பறக்கும் ராஜஸ்தானில் அதிரடியாக நகரும் தேர்தல் களம் - ஒரு பார்வை


அனல் பறக்கும் ராஜஸ்தானில் அதிரடியாக நகரும் தேர்தல் களம் - ஒரு பார்வை
x
தினத்தந்தி 5 April 2024 7:38 AM GMT (Updated: 5 April 2024 11:41 AM GMT)

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

இந்தியாவின் பழமையான, பாரம்பரியமான கலாச்சாரத்தை கொண்ட மாநிலம் ராஜஸ்தான். 'பிங்க் சிட்டி' என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும்.

ஜெய்ப்பூர் நகர அரண்மனை, உதயப்பூர் ஏரிகள், ஜோத்பூர் கோட்டைகள் மற்றும் ஜெய்சல்மேர், பிகானேர் கோட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை கொண்ட மாநிலம் ராஜஸ்தான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பஜன் லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த ராஜஸ்தான்

ஒரு காலத்தில் ராஜஸ்தான் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால், உட்கட்சி பிரச்சினைகளால் காங்கிரசின் பலம் மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. அதே நேரம் பா.ஜ.க. இமாலய வளர்ச்சி பெற்று அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் ஒட்டு மொத்த தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 24 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

கடந்த 2023-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியையும் காங்கிரஸ் பறிகொடுத்தது. அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அப்போதை முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இருந்த பனிப்போர்தான். அந்த தேர்தலில் 115 இடங்களை பிடித்த பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. பஜன்லால் சர்மா முதல்-மந்திரியானார்.

தனித்து களம் காணும் பா.ஜ.க.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் , தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 2 தொகுதிகளில் அனுமன் பெனிவால் தலைமையிலான ராஷ்டிரிய லோக்தந்திரிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா ஒரு இடங்களை ஒதுக்கியுள்ளது.

6 தொகுதிகளில் கடும் போட்டி

தனித்தே களம் காணும் பா.ஜ.க., பிரதமர் மோடியின் செல்வாக்கு, மத்திய அரசின் திட்டங்கள் தங்களுக்கு துணை நிற்கும் என்றும், சமீபத்திய சட்டசபை தேர்தல் வெற்றி தொடரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

அதேவேளை, ராகுல் காந்தியின் யாத்திரையால் புதிய உத்வேகம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. களத்தில் கடும் போட்டி நிலவினாலும் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் சுரு, கோட்டா-பூண்டி, சிகார், நாகவுர், பன்ஸ்வாரா மற்றும் பார்மர் ஆகிய 6 தொகுதிகளில் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

சுரு தொகுதி

சுரு தொகுதியில் 2 முறை எம்.பி.யாக இருந்த ராகுல் கஸ்வான் கட்சியின் மாநில தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சுரு தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ்.

இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தேவேந்திர ஜஜாரியா என்ற புதுமுகத்தை நிறுத்தியுள்ளது. இருவரும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இங்கு காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு ஆதரவு இருப்பதாலும் இந்த தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோட்டா-பூண்டி

கோட்டா-பூண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பிரகலாத் குஞ்சால் களமிறங்கியுள்ளார்.

பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு வந்துள்ள இவர், முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவரான வசுந்தரா ராஜேவுக்கும் நெருக்கமாக இருந்தவர். எனவே இவர் இந்த தொகுதியில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

சிகார்

சிகார் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ.வான அம்ராராம் போட்டியிடுகிறார். இங்கு பா.ஜ.க. வேட்பாளராக 2 முறை எம்.பி.யாக இருந்த சுவாமி சுமேதானந்தா மீண்டும் களம் காண்கிறார். இந்த தொகுதியில் பா.ஜ.க., காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகவுர்

ஜாட் இன மக்கன் ஆதிக்கம் செலுத்தும் நாகவுர் தொகுதியில் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமன் பெனிவால் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ஜோதி மிர்தா போட்டியிடுகிறார்.

செல்வாக்கு மிக்க ஜாட் இன மக்களின் தலைவராக அறியப்படும் அனுமன் பெனிவால், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதி மிர்தாவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இங்கும் கடும்போட்டி நிலவுகிறது.

பார்மர்

பார்மர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக உம்மடராமு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். இருவரும் வலுவான வேட்பாளர்கள் என்பதால் இங்கும் களம் சூடாக உள்ளது.

இதனிடையே சுயேச்சை எம்.எல்.ஏ.வான ரவீந்திரபதியும், இந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்து போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளார்.

பா.ஜ.க.வில் இருந்த ரவீந்திரபதி மாணவர் போராட்டங்களை முன்னெடுத்ததால், அந்த பகுதியில் பிரபலமானார். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரவீந்திரபதி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போட்டியிடும் பட்சத்தில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

பன்ஸ்வாரா

பழங்குடியினர் அதிகம் உள்ள தெற்கு ராஜஸ்தானில், பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மகேந்திரஜீத் சிங் மாலவியா களமிறங்குகிறார். காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்த இவர், பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழும் மகேந்திரஜீத் சிங் மாலவியாவை தற்போது பா.ஜ.க. பயன்படுத்தியுள்ளது.

இவரை எதிர்த்து, காங்கிரசுடன் இணைந்துள்ள பாரத் ஆதிவாசி கட்சி போட்டியிடுகிறது. இன்னும் அதன் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதுவும் கடும்போட்டியை சந்திக்கும் தொகுதிகளில் ஒன்று.

முன்னதாக பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய எம்.எல்.ஏ. ராஜ்குமார் ரோட், சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியை தக்க வைக்குமா?

ராஜஸ்தானில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் 12 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. எஞ்சிய 13 தொகுதிகளுக்கு 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தானில் வலுவான நிலையில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ளது. அதேவேளை, ராகுல் காந்தியின் வசீகரத்தால் ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்போம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. இதனால், அனல் பறக்கும் ராஜஸ்தானில் தேர்தல் களம் அதிரடி நகர்வுகளால் ஆட்டம் கண்டுள்ளது.


Next Story