'வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி வரவில்லை; தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - கனிமொழி
மழை, வெள்ளத்திற்கான நிவாரணம் கூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என கனிமொழி குற்றம்சாட்டினார்.
விருதுநகர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-
"பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இந்த தேர்தல்தான். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்க்கு பா.ஜ.க. அரசால் எந்த திட்டமும் வராது. மழை, வெள்ளம் வந்தால் நிவாரணம் கூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை. நாம் கஷ்டப்பட்ட சமயத்தில் ஒரு முறை கூட பிரதமர் மோடி இங்கு வரவில்லை. ஆனால் தற்போது தேர்தலுக்காக தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறார்."
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.