பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை; ராஜ்நாத் சிங்


பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை; ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 23 April 2024 6:32 PM IST (Updated: 23 April 2024 7:16 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மத அரசியல் செய்ததில்லை, சமூகத்தை பிளவுபடுத்தவும் நினைத்ததில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகின.

நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமிய மதத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பேசியதை பிரதமர் மோடி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு உள்ளது என்றனர். அப்படியேன்றால் இந்த சொத்துக்கள் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இந்த சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், மத அடிப்படையில் பிரதமர் மோடி அரசியல் செய்வதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட கிரேட்டர் நொய்டாவில் பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் சர்மாவுக்கு ஆதரவாக ராஜ்நாத் சிங் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது,

சகோதர, சகோதரிகளே, பிரதமர் மோடியை எனக்கு இன்று மட்டும் தெரிவதில்லை. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நீண்டகாலமாக நல்ல உறவு நீடித்து வருகிறது. பிரதமர் மோடி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ததில்லை. சமூகத்தை பிளவுபடுத்தி அரசியல் செய்ய பிரதமர் மோடி ஒருபோதும் நினைத்ததில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொத்துக்களை கணக்கிடுவோம் என்று கூறியிருந்ததை பிரதமர் மோடி கூறினார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தால் பின்னர் அதை கூறுவதை ஏன் எதிர்க்கிறார்கள். சொத்துக்களை கணக்கிடுவதன் மூலம் நீங்கள் (காங்கிரஸ்) என்ன செய்யப்போகிறீர்கள்? நாட்டின் வளங்களை சமமாக பங்கிட்டு வழங்க விரும்புகிறீர்களா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்?

2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பேசுகையில், நாட்டின் வளங்களில் யாருக்கேனும் முன்னுரிமை வழங்கப்படுமானால் அது சிறுபான்மையினருக்கு தான் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது' என்றார்.

சகோதர சகோதரிகளே நாட்டில் எவ்வளவு சொத்துக்கள், வளங்கள் உள்ளன அதில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார். நாங்கள் அவ்வாறு கூறவில்லை. தற்போது அதை பிரதமர் மோடி கூறினால் இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்புகின்றன

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story