'ஜூம்' மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம்: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்


ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம்: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
x

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் சில விஷமிகள் ஆபாச படங்களை பரப்பியதாக தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன். பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் இன்று வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின்போது ஆபாசமான படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் வருத்தமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "இன்று ஜூம் மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story