இந்த முறை ராபர்ட் வதேரா போட்டியிடவேண்டும்... அமேதியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்


இந்த முறை ராபர்ட் வதேரா போட்டியிடவேண்டும்... அமேதியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்
x
தினத்தந்தி 24 April 2024 12:42 PM GMT (Updated: 24 April 2024 12:43 PM GMT)

குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எதிரிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

அமேதி:

காங்கிரசின் கோட்டையான அமேதி மக்களவை தொகுதியில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். இந்த முறையும் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அமேதியில் போட்டியிடுவதற்கு ராகுல் காந்தி பயப்படுவதாக பா.ஜ.க. கூறுகிறது.

இந்நிலையில், அமேதியில் இந்த முறை காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவை போட்டியிட வைக்க வேண்டும் என்று போஸ்டர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அமேதி காங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு பதாகைகள் காணப்பட்டன. அதில், இந்த முறை ராபர்ட் வதேராவை அமேதி மக்கள் விரும்புகிறார்கள் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சமீபத்தில் மதுராவில் செய்தியாளர்களிடம் பேசிய வதேரா, அமேதி மக்கள் தன்னை தேர்வு செய்ய விரும்புவதாகவும், தனக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் கூறியிருந்தார். எனவே, வதேராவின் ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை வைத்திருக்கலாம் என பேசப்படுகிறது. ஆனால், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களிடையே தவறான தகவலை பரப்புவதற்காகவும் எதிரிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி செய்தித் தொடர்பாளர் அனில் சிங் கூறி உள்ளார்.

அந்த போஸ்டர்களை மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசுக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

அமேதி மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறும்.


Next Story