'பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புகிறார்' - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி பொய்களை கூறி உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் பொய்களை கூறி, உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி தேர்தல் களத்தின் நிகழ்ச்சி நிரலை மற்றொரு திசையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். முதலில் எங்கள் தேர்தல் அறிக்கைக்கு மதசாயம் பூச முயற்சித்தார். பின்னர் அதில் இல்லாத தகவல்கள் பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் பொய்யான பிரசாரம் ஆகும். அவர் தவறான வழியிலாவது எங்கள் தேர்தல் அறிக்கைக்கு விளம்பரம் செய்கிறார்.
எங்கள் நிகழ்ச்சி நிரல் நேர்மறையானது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அரசியல்சாசனம், நிறுவனங்கள் மீதான தாக்குதல் அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை மற்றும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது மக்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. '400-க்கு மேற்பட்ட தொகுதிகளை பெறுவோம்', 'மோடியின் வாக்குறுதி' போன்றவற்றை பிரதமர் மோடி தற்போது பயன்படுத்துவதில்லை. மாறாக மக்களை பிளவுபடுத்தும் மொழியை பயன்படுத்துகிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செல்வத்தை மறுபங்கீடு செய்யும் என கூறுகிறார். அப்படி எங்கள் தேர்தல் அறிக்கையில் இருப்பதை காட்ட முடியுமா? என அவருக்கு சவால் விடுக்கிறேன். பெண்களின் தாலியை பறித்து விடுவோம் என நாங்கள் எங்கே கூறியிருக்கிறோம். தாலிக்கு மரியாதை அளிக்காதவர்தான் இது குறித்து பேசி வருகிறார்.
பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார். வாய்மையே வெல்லும் என்பதற்கு பதிலாக பொய்மையே வெல்லும் என்பதை அடையாளப்படுத்துகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையில் அவரது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்."
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.