முடிவுகள் வெளியாகாதபோது தேர்தலில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதாக கூறுவது எப்படி..? - பிரியங்கா காந்தி கேள்வி


முடிவுகள் வெளியாகாதபோது தேர்தலில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதாக கூறுவது எப்படி..? - பிரியங்கா காந்தி கேள்வி
x

கோப்புப்படம்

முடிவுகள் வெளியாகாதபோது தேர்தலில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதாக கூறுவது எப்படி என பிரதமர் மோடியிடம் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவனந்தபுரம்,

18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

முதற்கட்ட தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் நிராகரித்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, "தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தேர்தலில் காங்கிரசும், இந்தியா கூட்டணியும் நிராகரிக்கப்பட்டதாக பிரதமர் கூறுகிறார்.

முடிவுகள் வெளியாகாதபோது அவருக்கு இது எப்படி தெரியும்.? மேலும் இந்த முறை 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று பிரதமரும், பா.ஜனதாவும் எப்படி கூற முடியும்.?" என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர், "முடிவுகள் வராத நிலையில் அவர்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்கிறோம். எங்கு சென்றாலும் மாற்றத்தை விரும்பும் மக்களை பார்க்கிறேன். மாற்றம் வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

அதன் பின்னர், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி "இன்னும் சில நாட்களில் அதை பார்க்கலாம்" என்றார்.


Next Story