ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை... ராஞ்சி இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்


ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை... ராஞ்சி இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்
x

ராஞ்சி பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவ்வகையில், மத்திய பிரதேசத்தின் சத்னா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய நகரங்களில், இந்தியா கூட்டணியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான பயணத்திட்டமும் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று பிரசாரம் மேற்கொள்ள மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

"ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியேற முடியவில்லை. எனவே, சத்னா மற்றும் ராஞ்சி பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றுகிறார்" என ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஞ்சியில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஞ்சி பொதுக்கூட்டம் தொடர்பாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


Next Story
  • chat