மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்


மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 20 March 2024 6:46 AM GMT (Updated: 20 March 2024 6:50 AM GMT)

கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார்.

அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவுக்கும், அவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதற்கிடையே, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. தெலுங்கானா மாநில அரசுடன் சுமுக உறவு இல்லாததால், பெரும்பாலும் அவர் புதுச்சேரியிலேயே தங்கி இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் வாழ்க்கைக்கு திரும்பப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தனது 2 மாநில கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்த நிலையில், கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக தமிழிசை சவுந்தரராஜன் கமலாலயம் வந்தார். அவரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.


Next Story