எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
சென்னை,
எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பதாக அ.தி.மு.க. சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் மீது புகார் தெரிவித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள், உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை தினமும் தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தும் வகையில் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது.
இதற்காக இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் இந்த நியாயமற்ற செயல்பாடு, நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தையே சிதைக்கிறது. உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது. கருத்து உரிமை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.