தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை


தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை
x

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்திருந்தனர். அதேபோல் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் காரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் காரை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் காரில் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மூன்றாவது மைல் என்ற இடத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது. அவருடைய காரில் பணம் உள்ளிட்ட பொருட்களை எதுவும் இல்லாததால் தொடர்ந்து செல்ல, பறக்கும் படை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story