டி.டி.வி. தினகரன் வாகனத்திற்கு அனுமதி மறுப்பு: கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம் - தேனியில் பரபரப்பு
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேனி,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான இன்று இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய அவர் பிரசார வாகனத்தில் வந்தார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர் கலெக்டர் அலுவலகத்திற்குள் வாகனத்தில் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் பிரசார வேனில் இருந்து இறங்கி நடந்து செல்லுமாறும் டி.டி.வி. தினகரனுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அ.ம.மு.க. கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் அதிக அளவில் உள்ளதால் இறங்கி செல்வது சிரமம் என்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆதரவாளர்கள் என்னுடன் வருவார்கள் என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதையடுத்து போலீசார் டி.டி.வி. தினகரனின் வாகனத்தை அனுமதித்தனர். பின்னர் தொண்டர்களை சமாதானம் செய்து, டி.டி.வி. தினகரன் தேனி மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.