திரையில் 50-வது வருடம்.. 75 வயதிலும் சூப்பர்ஸ்டாரின் குறையாத எனர்ஜி..!


திரையில் 50-வது வருடம்.. 75 வயதிலும் சூப்பர்ஸ்டாரின் குறையாத எனர்ஜி..!
x
தினத்தந்தி 12 Dec 2025 11:54 AM IST (Updated: 12 Dec 2025 1:04 PM IST)
t-max-icont-min-icon

சிவாஜிராவாக இருந்த பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியவர் இயக்குனர் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்த்.. பெயரிலேயே காந்தத்தை வைத்திருப்பதாலோ என்னவோ, "சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்.." என்ற அளவுக்கு, அத்தனை வயது ரசிகர்களையும் ஈர்த்து வைத்துள்ளார்.

இளமைப்பருவம்

இன்றைக்கு இவர் ஆசிய அளவில் சூப்பர் ஸ்டாராக திரைத்துறையில் ஜொலித்தாலும், இளமை காலம் இவருக்கு அருமையாக அமையவில்லை. பெங்களூருவில் 1950-ம் ஆண்டு இதே நாள் (டிசம்பர் 12) பிறந்த ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட்.

குழந்தை பருவத்திலேயே தனது தாயை இழந்த அவர், தனது அண்ணன் - அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்தார். இயற்கையிலேயே இவரிடம் முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியில் சேர்ந்த பிறகு அவரது குணம் மாற்றம் அடையத்தொடங்கியது.

வாழ்க்கை பயணம்

படிப்பை பாதியில் விட்ட அவர், ஆபிஸ் பையனாக தனது பணியை தொடங்கினார். பிறகு மூட்டை தூக்கும் தொழிலாளி, தச்சுப் பட்டறை தொழிலாளி என கடின வாழ்க்கை வாழ்ந்த அவர், கர்நாடக போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியில் சேர்ந்தார்.

அப்போதே தனக்கென தனி ஸ்டைலை வைத்திருந்தார். பஸ்சில் ஏறுவது, இறங்குவது, விசில் அடிப்பது என்று எல்லாமே பயணிகளை திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது.

ஏற்றம் பெற்ற வாழ்க்கை

சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவரிடம் இருந்ததால், சென்னைக்கு வந்தார். இங்கே அவரது நண்பரான ராஜ் பகதூரின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு தாகம் அவரிடம் அடங்காததால், தமிழக அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றார்.

அதன்பிறகு, கே.பாலசந்தரின் கண்ணில் பட்ட அவருடைய வாழ்க்கை திசைமாறி ஏற்றம் பெறத் தொடங்கியது. கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் அவர் பேசிய முதல் வசனம், "பைரவி வீடு இதுதானா?... நான் பைரவியின் புருஷன்" என்பதுதான். அந்த முதல் வசனத்தையும் தனது பிற்கால நண்பர் கமல்ஹாசனிடம்தான் பேசினார்.

ஹீரோவான முதல் படம்

அதுவரை சிவாஜிராவாக இருந்த பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியவர் இயக்குனர் கே.பாலசந்தர். அவருடைய படங்களில் ரஜினிகாந்த் வில்லனாகத்தான் நடித்தார். கே.பாலசந்தரின் 'மூன்று முடிச்சு', 'அவர்கள்' படங்களில் ரஜினிதான் பிரதான வில்லன்.

அவரை குணசத்திர நடிகராக மாற்றியவர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அவரது இயக்கத்தில் 'புவனா ஒரு கேள்விக் குறி' படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ரஜினிகாந்த் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் 'பைரவி'. தயாரிப்பாளர் கலைஞானத்தால் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். திரைத்துறையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்தில் இருந்த காலத்தில் ரஜினிகாந்தும் வளரத் தொடங்கினார். 1975-1985 காலக்கட்டத்தில் பல வித்தியாசமான படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்தார்.

சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்

அது 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு நடிகர் ரஜினிகாந்தை உயர்த்தியது. 1990-க்கு பிறகு வெளிவந்த 'தளபதி', 'மன்னன்', 'அண்ணாமலை', 'உழைப்பாளி', 'வீரா', 'பாட்ஷா', 'முத்து', 'அருணாச்சலம்', 'படையப்பா' என அவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என 7 மொழிப் படங்களில் நடித்துள்ளார். 'அபூர்வ ராகங்கள்' முதல் 'கூலி' வரை 175 படங்களுக்கு மேல் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

திரை மைல் கற்கள்

அவருடைய திரை வாழ்க்கையில் மைல்கல்லாக பார்த்தால், முதல் படம் 'அபூர்வ ராகங்கள்' (1975, தமிழ்), 25-வது படம் 'மாத்து தப்பாத மக' (1978, கன்னடம்), 50-வது படம் 'நான் வாழவைப்பேன்' (1979, தமிழ்), 75-வது படம் 'போக்கிரி ராஜா' (1981, தமிழ்), 100-வது படம் 'நான் சிகப்பு மனிதன்' (1985, தமிழ்), 125-வது படம் 'தமாசா' (1988, இந்தி), 150-வது படம் 'இன்சானியத் கே தேவதா' (1993, இந்தி), 175-வது படம் 'எந்திரன் 2.0' (2018, தமிழ்) ஆகும்.

பாடகர் - திரைக்கதை ஆசிரியர்

இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்கள் 180-ஐ நெருங்கினாலும், அவர் 2 பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். 'மன்னன்' படத்தில் வரும் 'அடிக்குது குளிரு..', 'கோச்சடையான்' படத்தில் வரும் 'எதிரிகள் இல்லை..' என்ற பாடல்களுமே அது.

அவர் திரைக்கதை எழுதிய படங்களும் இரண்டுதான். 'வள்ளி', 'பாபா' படங்களுக்கு அவர் திரைக்கதை எழுதியுள்ளார். மற்றொரு படமான 'ராணா'வுக்கு அவர் திரைக்கதை எழுதினாலும் படம் எடுக்கப்படவில்லை.

இப்படி, 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், எத்தனையோ விருதுகளை வென்ற ரஜினிகாந்த், அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராகவே அதே எனர்ஜியுடன் ரசிகர்கள் மனதில் மின்னிக் கொண்டிருக்கிறார். 'படையப்பா' படத்தில், "வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் குறையல" என்று ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனமே ரசிகர்களின் எண்ணமாகவும் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது. இதுவே திரைத் துறையில் ரஜினிகாந்துக்கு வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

1 More update

Next Story