2027 ஒருநாள் உலகக்கோப்பை: இந்திய அணியில் அவர்களின் பெயரை இப்போதே.. - கவாஸ்கர் ஆதரவு

விராட் மற்றும் ரோகித் இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர்.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த தொடரின் மூலம் இந்திய முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். இந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.
இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
மேலும் அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவர்களை கழற்றி விட இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு அவர்கள் இந்த போட்டியின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர்களுடைய பெயரை இப்போதே எழுதலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடுவதற்காக விராட், ரோகித் தங்களைத் தாங்களே தயாராக வைத்திருந்தனர். இப்போது என்ன நடந்தாலும் அவர்கள் ரன்கள் எடுத்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் உள்ள திறமை மற்றும் அனுபவத்திற்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் உறுதியாக இருப்பார்கள். குறிப்பாக தற்போது அவர்கள் இருக்கும் பார்முக்கு நீங்கள் அவர்களுடைய பெயரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இப்போதே எழுதலாம்” என்று கூறினார்.






