2-வது டெஸ்ட்: ரிட்டயர்டு ஹர்ட் ஆன கேப்டன் ரிஷப் பண்ட்.. இந்திய ஏ அணிக்கு பின்னடைவு

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் அக்கர்மேன் 134 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 34 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 78 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அடித்து ஆட முற்பட்ட ரிஷப் பண்ட், உடலில் பந்தால் அடி வாங்கினார். அதில் ஒரு பவுன்சர் பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனையடுத்து அணியின் மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அதில் அவருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிந்த பின்னர் மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டின் மணிக்கட்டில் ஒரு பந்து பலமாக தாக்கியது. இதனால் வலியால் துடித்த பண்ட் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாத நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து துருவ் ஜூரெல் களமிறங்கினார். ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது இந்திய ஏ அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்ட் 3 மாத ஓய்வுக்கு பின் மீண்டும் இந்த தொடரின் மூலம் மீண்டும் களத்திற்கு திரும்பி இருந்தார். தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்துள்ளதால் வரும் 14ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.






