4-வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் விளையாடுவதில் சிக்கல்

image courtesy:PTI
லார்ட்சில் நடைபெற்ற 3-வது போட்டியில் ரிஷப் பண்டுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.
மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. லார்ட்சில் நடந்த 3-வது போட்டியின் முதல் நாளில் காயமடைந்த அவர் அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. பேட்டிங் மட்டுமே செய்தார். துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்துக்கொண்டார். காயம் முழுமையாக குணமடையாததால் பண்ட் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிஷப் பண்டுக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார். இருப்பினும் முழுவதும் குணமடைந்தால் மட்டுமே பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "ரிஷப் பண்ட் 4-வது டெஸ்டுக்கு முன் மான்செஸ்டரில் பேட்டிங் செய்வார். எந்தச் சூழ்நிலையிலும் ரிஷப் பண்டை போட்டியில் இருந்து வெளியேற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. 3-வது டெஸ்டில் அவர் மிகுந்த வலியுடன் பேட்டிங் செய்தார். இனிமேல் அவரது விரலில் வலி குறையவே வாய்ப்புள்ளது,
விக்கெட் கீப்பிங்தான் அவர் குணமடைவதின் கடைசிப் பகுதி. அவர் கீப்பிங் செய்ய முடியுமா என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் உடல் தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் நிச்சயம் விளையாடுவார்" என்று கூறினார்.






