அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நெருங்கும் வங்காளதேசம்

ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள் குவித்தார்.
டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டார்லிங் அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 301 ரன்கள் பின் தங்கிய நிலையில் அயர்லாந்து நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், வங்காளதேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன்படி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்தைவிட 215 ரன்கள் முன்னிலையில் வங்காளதேசம் உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் வெற்றியை நெருங்கியுள்ளது.






