டேரில் மிட்செல் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து


டேரில் மிட்செல் அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து
x

Image Courtesy: @BLACKCAPS / X (Twitter) / File Image 

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 78 ரன் எடுத்தார்.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் (2வது போட்டியில் வெற்றி) இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் மற்றும் 3வது போட்டி மழையால் ரத்தானது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஹாரி புரூக் ஒரு புறம் நிலைத்து நின்று ஆடி சதம் அடிக்க மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 35.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 135 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜாக்கரி போல்க்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது.

நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் கண்டனர். இதில் வில் யங் 5 ரன்னிலும், ரவீந்திரா 17 ரன்னிலும், அடுத்து வந்த வில்லியம்சன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் டாம் லாதம் ஜோடி சேர்ந்தனர். இதில் மிட்செல் ஒருபுறம் நிதானமாக ஆடினார். மறுபுறம் டாம் லாதம் 24 ரன்னிலும், அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் களம் கண்டார். மறுபுறம் நிதானமாக ஆடிய மிட்செல் அரைசதம் அடித்தார். சாண்ட்னெர் 27 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 36.4 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 78 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது.

1 More update

Next Story