5வது நாள் ஆட்டம்: ரிஷப் பண்ட் விளையாடுவாரா..? - பயிற்சியாளர் அளித்த பதில்


5வது நாள் ஆட்டம்: ரிஷப் பண்ட் விளையாடுவாரா..? - பயிற்சியாளர் அளித்த பதில்
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 27 July 2025 12:15 PM IST (Updated: 27 July 2025 12:15 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 137 ரன்கள் இந்திய அணி பின் தங்கியுள்ளது. கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்க போராட வேண்டியிருக்கும். அதேவேளையில், இங்கிலாந்து அணியின் கை இந்த டெஸ்ட்டில் ஓங்கியுள்ளது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும். புதிய பந்து எடுக்கும்போது இந்தியாவுக்கு கடும் சவால் இருக்கும். 80 ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்படும். இதனால் முதல் செசன் (மதிய உணவு, இடைவேளை வரை) மிகவும் முக்கியமானது.

இந்நிலையில், இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் காயத்துடன் இருக்கும் ரிஷப் பண்ட் ஆடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2-வது இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் விளையாடுவார். முதல் ஓவரில் 2 விக்கெட் இழந்த பிறகு கேப்டன் சுப்மன் கில்லும், ராகுலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் விளையாடினார்கள்.

பந்து வீச்சுத் தன்மையை பொறுத்து பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினார்கள். 3-வது வரிசை குறித்து அணி பெரிதாக கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.வலதுகாலில் எலும்பு முறிவு இருந்தபோதிலும் ரிஷப்பண்ட் 2-வது நாளில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். முதல் நாளில் பேட்டிங்கின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story