முதலாவது டி20 கிரிக்கெட்; பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @BCBtigers
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
லிட்டான் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி, இலங்கையை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்தி டி20 தொடரை வென்ற (2-1) உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை போட்டி அரங்கேறுகிறது. அந்த போட்டிக்கு தயாராக இரு அணிகளும் இந்த தொடரை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
சொந்த மண்ணில் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. வங்காளதேசத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் அணி, அந்த அணிக்கு எதிராக இதுவரை 22 சர்வதேச போட்டியில் விளையாடி 19-ல் வெற்றி கண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியின் சவாலை சமாளிப்பது வங்காளதேசத்துக்கு எளிதாக இருக்காது.
அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்ற வங்காளதேச அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். உள்ளூர் சூழல் அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.






