முதல் டி20: வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி


முதல் டி20: வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
x

image courtesy:twitter/@ICC

ஷதாப் கான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

லாகூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பகர் ஜமான் ஒரு ரன்னிலும், சைம் அயுப் டக் அவுட் ஆகியும் ஏமாற்றினர்.

இருப்பினும் பின்னர் களமிறங்கிய முகமது ஹாரிஸ் (31 ரன்கள்), சல்மான் ஆகா (56 ரன்கள்), ஹசன் நவாஸ் (44 ரன்கள்) மற்றும் ஷதாப் கான் (48 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 19.2 ஓவர்கள் வரை தாகுப்பிடித்த வங்காளதேசம் 164 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 48 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஷதாப் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story