கிரீன், மேக்ஸ்வெல் இல்லை.. சிஎஸ்கே மினி ஏலத்தில் அந்த வீரரை வாங்க வேண்டும் - அஸ்வின்

அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற உள்ளது.
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ரசல், பதிரானா, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இவர்கள் ஏலத்தில் இடம்பெற உள்ளனர். மினி ஏலத்தில் இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு ராஜஸ்தானிலிருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியது.
இதனால் சென்னை அணி திறமையான ஆல் ரவுண்டர்களுக்கு ஏலத்தின்போது குறிவைக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக ரசல், கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் என தெரிகிறது.
இந்நிலையில் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கேமரூன் கிரீனை விட ஆந்த்ரே ரசலை வாங்க வேண்டும் என இந்தியா மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கொல்கத்தா இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து சென்னை அணிக்கு கேமரூன் கிரீனை விட ரசல் சரியான தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறன். கிரீன் ஒரு பினிஷர் அல்ல. மாத்ரே, ருதுராஜ், பிரெவிஸ், துபே, தோனி ஆகியோருக்குப் பிறகு அவர் விளையாட வேண்டியிருக்கும்.
எனவே இன்னிங்ஸை முடிக்க வருவதற்கு ஏற்ற பேட்டர் ரசல்தான். ரசல் பினிஷராக விளையாடுவது மட்டுமின்றி பந்துவீச்சிலும் பயனுள்ள வீரராக இருப்பார். எனவே கேமரூன் கிரீனின் விலையை சிஎஸ்கே ஏலத்தில் ஏற்றிவிட வேண்டும். அவ்வாறு நடந்து கிரீனை அதிக தொகைக்கு கொல்கத்தா வாங்கினால் ரசலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எளிதில் வாங்க முடியும்” என்று கூறினார்.






