விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட்

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். சாய் சுதர்சன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட், காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாமல் பாதியில் வெளியேறினார்.
இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே அடித்த ஜடேஜா 20 ரன்களில் அவுட்டானார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாட மறுமுனையில் ஷர்துல் தாகூர் 41 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். இதனால் 314 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்வரிசையில் பும்ரா, சிராஜ், கம்போஜ் ஆகிய பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்தார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தற்போது வரை இந்திய அணி 105 ஓவர்களில் 321 ரன்கள் அடித்துள்ளது. ரிஷப் பண்ட் 39 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.






