மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொழும்பு,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா களமிறங்கியுள்ளனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரதிகா 31 ரன்களிலும், மந்தனா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹெர்லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 65 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஜெரேமியா 32 ரன்களிலும், தீப்தி 25 ரன்களிலும், ரானா 20 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 35 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் டையானா பைஹ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாட உள்ளது.






