இந்திய அணியில் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டும் - ரஹானே யோசனை

image courtesy:BCCI
இந்திய அணி கூடுதலாக ஒரு பவுலரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என ரஹானே கூறியுள்ளார்.
மும்பை,
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி மற்றும் அதில் இருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்யா ரஹானே சில யோசனைகளை தெரிவித்துள்ளார். அவர் தனது யூடியூப் சேனலில் பேசும் போது கூறியதாவது,
டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே 4-வது மற்றும் 5-வது நாளில் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ரன் எடுப்பது எளிதாக இருக்காது. 3-வது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினர். நாம் முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டுவிட்டோம்.
அது மட்டுமின்றி இந்திய அணி கூடுதலாக ஒரு பவுலரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் அல்லது தொடரையோ வெல்வதற்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டியது அவசியம்.
பொதுவாக மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக 2-3 பந்துகள் மட்டுமே வீச வேண்டி இருக்கும் போது, பீல்டர்கள் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பார்கள். ஆனால் அந்த சமயத்திலும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களத்தில் ரொம்ப தீவிரமாக இருந்தார். அவரது வேகமும், பந்தை பிடித்து துரிதமாக ரிஷப் பண்டை ரன்-அவுட் செய்த விதமும் இங்கிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






