இந்தியா டெஸ்ட், வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை... - ஹர்பஜன் யோசனை


இந்தியா டெஸ்ட், வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை... - ஹர்பஜன் யோசனை
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கம்பீரின் தலைமையின் கீழ் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

முன்னதாக ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பீர் செட்டாக மாட்டார் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் அவருடைய தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா ஓரளவு சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை 12 வருடங்கள் கழித்து இந்தியா வென்று அசத்தியது.

இந்நிலையில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு (ஒருநாள் மற்றும் டி20) தனித்தனியே பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று ஹர்பஜன் யோசனை தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தனித்தனி பயிற்சியாளர்களை நியமிப்பதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் வெவ்வேறு பார்மட்டுக்கு வெவ்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். பயிற்சியாளர்கள் உட்பட அனைவருக்கும் இது பணிச்சுமையைக் குறைக்கும். எனவே அதைச் செய்ய முடிந்தால், அது ஒரு நல்ல வழி. ஏனென்றால் உங்கள் பயிற்சியாளருக்கும் ஒரு தொடருக்கு தயாராக நேரம் தேவை. இதன் மூலம் பயிற்சியாளர் தனது அணி என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தயாரித்து அமைக்க முடியும்.

நீங்கள் ஒரே பயிற்சியாளருடன் அதிகமாக வேலை செய்தால் அதீத சுமை ஏற்படலாம். அந்தப் பயிற்சியாளருக்கும் குடும்பம் போன்ற இதர பொறுப்புகள் இருக்கிறது. குடும்பம் இல்லாமல் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணிப்பது எளிது கிடையாது. எனவே என்னிடம் கேட்டால் சிவப்பு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனியே பயிற்சியாளர்களைப் பிரிப்பது ஒரு நல்ல நடவடிக்கை" என்று கூறினார்.


1 More update

Next Story