ஐ.பி.எல்.: தோனி இருக்கும் வரை பெங்களூருவால் கோப்பையை... - பாக். முன்னாள் வீரர் அதிரடி கருத்து

image courtesy:PTI
சென்னை அணியில் தோனி இருக்கும் வரை பெங்களூருவால் கோப்பையை வெல்ல முடியாது என்று ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.
கராச்சி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
முன்னதாக ஐ.பி.எல். ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே விளையாடி வரும் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அந்த சூழலில் இந்த முறை புதிய கேப்டனான ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் குறித்து பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான ரஷித் லதீப், அகமது ஷேசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் பேசிய அகமது ஷேசாத் கூறுகையில், "ஒருவேளை முகமது அமீர் ஆர்சிபி அணிக்காக விளையாடினால் அவர்கள் ஐ.பி.எல். கோப்பையை வெல்லக்கூடும்" என்று கூறினார்.
அதற்கு அதிரடியான பதில் கொடுத்த ரஷித் லதீப், "சென்னை அணியில் தோனி இருக்கும் வரை ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை தொட்டுப் பார்ப்பதைக் கூட நினைக்க கூடாது" என்று கூறினார்.






