ஐ.பி.எல்.: சாம்சனுக்காக ஜடேஜாவை தோனி... - இந்திய முன்னாள் வீரர்

சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இதில் முக்கியமான ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதில் ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அணியின் நலனுக்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தோனி துணிந்து விடுவார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்தே தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகிறார்கள். இதில் தோனி சென்னை அணியை விட்டு ஒரு போதும் வெளியேறியதில்லை. சாம்சன், ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனாக இருக்கும். சாம்சன் சி.எஸ்.கே.-வில் இணைந்து தோனி மற்றும் அணி நிர்வாகத்துடனும் எளிதில் பழகி விட்டால் ஒரு வேளை அவரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்து விட்டு பாதியிலேயே டோனி விலக வாய்ப்புள்ளது.
சி.எஸ்.கே. ஏற்கனவே ஜடேஜாவை கேப்டனாக்கி பார்த்தது. ஆனால் அது தனக்கு சவுகரியமாக இல்லை என கூறி பாதியிலேயே ஜடேஜா ஒதுங்கி விட்டார். இனி, நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரை கொண்டு வருவதையே தோனி விரும்புவார்.
கடந்த முறை சி.எஸ்.கே. அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த தடவை வலிமையாக மீண்டு வந்து மற்றொரு முறை கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய லட்சியமாகும். தோனிக்கு அணியின் நலன்தான் மிகவும் முக்கியம். எனவே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்” என்று கூறினார்.






