குசல் மெண்டிஸ் சதம்... வங்காளதேச அணிக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை


குசல் மெண்டிஸ் சதம்... வங்காளதேச அணிக்கு 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
x

image courtesy:twitter/@OfficialSLC

இலங்கை - வங்காளதேசம் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

பல்லகலே,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி பல்லகலேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா - நிஷன் மதுஷ்கா களமிறங்கினர். இதில் மதுஷ்கா ஒரு ரன்னில் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் நிசங்கா 35 ரன்களிலும், அவரை தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சரித் அசலன்கா, குசல் மெண்டிஸ் உடன் கை கோர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை அணியின் ரன்வேகம் சீராக உயர்ந்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் சதமடித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அசலன்கா 58 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த பிறகும் தொடர்ந்து விளையாடிய குசல் 124 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹசரங்கா (18 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 285 ரன்கள் அடித்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்க உள்ளது.

1 More update

Next Story