கில் இல்லை.. இந்திய அணியில் அடுத்த விராட் இவர்தான் - இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு

இந்தியா -இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சாதிப்பார்களா? என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் கே.எல்.ராகுல்தான் அடுத்த விராட் கோலி என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓவைஷ் ஷா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கே.எல். ராகுல், கோலியின் நிழலில் இருந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். கோலி கிரீசில் இருக்கும்போது, அவர் எப்போதும் உங்கள் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பார். அதேபோன்று தற்போது கே.எல் ராகுல் அந்த இடத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ராகுல் எப்போதும் கவனத்தில் கொள்ளப்படுவார். விராட் கோலி இல்லாத முதல் தொடர் இது. பேட்டிங் வரிசையைப் பாருங்கள். சுப்மன் கில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இவ்வளவு திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆனால், பேட்டிங் வரிசையில் நீங்கள் நம்பியிருக்க வேண்டிய சிறந்த பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் என்று நான் இன்னும் நினைக்கிறேன். அவர் தனது சிறந்ததை வழங்க வேண்டிய நேரம் இது. அடுத்த 10-15 போட்டிகளில் கே.எல்.ராகுல், சுப்மான் கில்லை விட சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். அடுத்த 12 மாதங்களில் அவர் உண்மையிலேயே உருவாவார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.






