இன்னிங்ஸ் ஒன்று... சாதனைகள் பல.. ரிஷப் பண்ட் அசத்தல்


இன்னிங்ஸ் ஒன்று... சாதனைகள் பல.. ரிஷப் பண்ட் அசத்தல்
x

image courtesy:BCCI

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்தார்.

மான்செஸ்டர்,

இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.

இந்திய அணியின் முதல் இன்னிங்சின் முதல் நாள் (நேற்று) ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் (2-வது நாள்) ஆடுவதில் சந்தேகம் நிலவியது. இருப்பினும் அணியின் நலனுக்காக காயத்தை பொருட்படுத்தாத அவர் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அவை விவரம் பின்வருமாறு:-

1. இந்த இன்னிங்சில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து ரிஷப் பண்ட் டெஸ்டில் இதுவரை 90 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.

2. இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.

3. நடப்பு தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 5 முறை 50+ ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

4. இந்த தொடரில் பண்ட் இதுவரை 479 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.

1 More update

Next Story