பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
முல்தான்,
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும், பாகிஸ்தான் 154 ரன்களும் அடித்தன.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து வலுவான இலக்கை நோக்கி பயணித்தது. 66.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய பாபர் அசாம் தனது பங்குக்கு 31 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் அடித்துள்ளது. சாத் ஷகீல் 13 ரன்களுடனும், காசிப் அலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






