பாக்.பீல்டர் எறிந்த பந்து.. வலியால் துடித்த கள நடுவர்.. பரபரப்பு வீடியோ வைரல்


பாக்.பீல்டர் எறிந்த பந்து.. வலியால் துடித்த கள நடுவர்.. பரபரப்பு வீடியோ வைரல்
x
தினத்தந்தி 18 Sept 2025 1:39 PM IST (Updated: 18 Sept 2025 1:43 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - யுஏஇ ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பஹர் ஜமான் அரைசதம் அடித்தார். யுஏஇ தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் யுஏஇ அணி சேசிங் செய்தபோது 6-வது ஓவரை பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சைம் அயூப் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட துருவ் பராஷர் அதனை மிட் - ஆன் திசையை நோக்கி அடித்தார். அது அங்கு பீல்டிங் நின்றிருந்த பாகிஸ்தான் வீரரின் கைக்கு சென்றது. அதனால் ரன் எதுவும் எடுக்கவில்லை.

ஆனால் அந்த பந்தை பிடித்த பாகிஸ்தான் வீரர் சரியாக கவனிக்காமல் புவுலரை நோக்கி வீசினார். அது கள நடுவர் ருசிரா பல்லியகுருகேவின் காதில் பட்டது. ஒரு கணம் திகைத்த அவர் வலியால் துடித்தார். உடனே களத்தில் இருந்த வீரர்களும், பாகிஸ்தான் அணியின் பிசியோவும் வந்து அவரை சோதித்தனர். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அவரை சோதனை செய்ததில் அவர் நலமாக இருந்ததுபோல் தெரிந்தாலும் தொடர்ந்து நடுவர் பணியை கவனிக்க முடியவில்லை. அதனால் களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக ரிசர்வ் நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த காசி சோஹெல் கள நடுவர் பணியை கவனித்தார். இந்த பரபரப்பு சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story