ரச்சின் ரவீந்திரா அபார சதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து


ரச்சின் ரவீந்திரா அபார சதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து
x
தினத்தந்தி 24 Feb 2025 10:13 PM IST (Updated: 24 Feb 2025 10:13 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் எடுத்தார்.

ராவல்பிண்டி,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே களம் இறங்கினர்.

இதில் வில் யங் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய கான்வே 30 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லாதம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த இணையை பிரிக்க முடியாமல் வங்காளதேச வீரர்கள் திணறினர். இதில் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்த ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். அவர் சதம் அடித்த நிலையில் 112 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து க்ளென் பிலிப்ஸ் களம் இறங்கினார். மறுபுறம் நிதானமாக ஆடிய டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து மைக்கேல் பிரேஸ்வெல் களம் இறங்கினார். இறுதியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் எடுத்தார்.

1 More update

Next Story