களத்தில் சாய் உடன் தமிழ்.. பண்டுடன் ஹிந்தி, கருண் நாயருடன் கன்னடத்தில் பேசிய ராகுல் - ரசிகர்கள் வியப்பு


களத்தில் சாய் உடன் தமிழ்.. பண்டுடன் ஹிந்தி, கருண் நாயருடன் கன்னடத்தில் பேசிய ராகுல் - ரசிகர்கள் வியப்பு
x

image courtesy: BCCI

தினத்தந்தி 24 Jun 2025 2:17 PM IST (Updated: 24 Jun 2025 9:45 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் சதமடித்து அசத்தினார்.

லீட்ஸ்,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். முதல் ஓவரிலேயே கில் (8 ரன்) பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் போல்டானார். இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகோர்த்தார். இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

நேரம் செல்ல செல்ல அதிரடியை தொடங்கிய பண்ட் சோயிப் பஷீரின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு குதூகலப்படுத்தினார். மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்டும் சதத்தை எட்டினார். முதல் இன்னிங்சிலும் பண்ட் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

சதமடித்த பின் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு கருண் நாயர் இறங்கினார். இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லோகேஷ் ராகுல் தனது பங்குக்கு 137 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர்கள் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் பின்வரிசை விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர்ந்து கருண் நாயர் 20 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். ஷர்துல் தாக்குர்(4 ரன்), முகமது சிராஜ் (0), பும்ரா (0), பிரசித் கிருஷ்ணா (0) வரிசையாக நடையை கட்டினர். இடையில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 25 ரன்கள் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

முன்னதாக இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் நங்கூரம் போல் நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுல் சக வீரர்களிடம் அவரவர் மொழியில் பேசி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்.

சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடும்போது தமிழிலும், பண்ட் உடன் ஹிந்தியிலும், கருண் நாயருடன் கன்னடத்திலும் பேசினார். இதனால் கே.எல். ராகுல் பேட்டிங்கில் மட்டும் பன்முகத்தன்மை கொண்டவர் அல்ல என ரசிகர்கள் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

1 More update

Next Story