ரவீந்திர ஜடேஜா கடைசி வரை சிறப்பாக போராடினார் - இந்திய முன்னாள் கேப்டன்

Image Courtesy: @BCCI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று சிறப்பாக போராடினார் என இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, என்ன ஒரு டெஸ்ட் மேட்ச். இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறும். ஆனாலும் கடந்த மூன்று போட்டிகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா கடைசி வரை சிறப்பாக போராடினார். 193 ரன்கள் என்பது பெரிய இலக்கு இல்லை என்பதை காட்டினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






