இந்தியாவுக்கு எதிராக விளையாட தயாராக உள்ளோம் - இங்கிலாந்து வீரர் பேட்டி

image courtesy:PTI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உற்சாகத்துடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்தின் ஆலி போப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது இளமையான அணி. ஆனால் இந்த இந்திய வீரர்களிடம் நிறைய ஆழமான திறமை இருக்கிறது. அவர்கள் நல்ல இளம் வீரர்களுடன் இங்கே வந்திருக்கிறார்கள். ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு சத்தமாக பேசக்கூடிய ஒளி நிறைந்த விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யும். ஆனால், அவர்களுடைய மற்ற வீரர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்கள்.
அதற்கு எங்களுடைய வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு சிறந்த நேரமாகும். கடந்த கோடைக் காலத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடினோம். ஆனால், இந்திய அணி நிறைய தரத்தைக் கொண்டு வரும்.
எனவே, நாங்கள் அதிகமாக எதையும் பார்க்காமல் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக இத்தொடரில் விளையாட நாங்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.