இந்திய கிரிக்கெட் அணியில் விராட், ரோகித் சர்மாவின் எதிர்காலம் என்ன..? விரைவில் பி.சி.சி.ஐ. முடிவு


இந்திய கிரிக்கெட் அணியில் விராட், ரோகித் சர்மாவின் எதிர்காலம் என்ன..? விரைவில் பி.சி.சி.ஐ. முடிவு
x

image courtesy:PTI

தினத்தந்தி 7 Aug 2025 3:43 PM IST (Updated: 7 Aug 2025 4:43 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்த்த வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் இல்லாமல் இந்திய அணியால் சாதிக்க முடியுமா? என்று கேள்விகள் நிலவின. அந்த கேள்விகளுக்கெல்லாம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தக்க பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்களின் எதிர்காலம் குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர், கோலி மற்றும் ரோகித் சர்மாவை 2027 உலகக் கோப்பை வரை தொடர அனுமதிப்பதா அல்லது இளம் வீரர்களுக்கு வழிவிடுவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளனர்.

இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், ஆம், இது குறித்து விரைவில் விவாதிக்கப்படும். அடுத்த உலகக்கோப்பைக்கு (நவம்பர் 2027) இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. கோலி மற்றும் ரோகித் இருவரும் அந்த நேரத்தில் 40 வயதை எட்டுவார்கள், எனவே எங்கள் கடைசி வெற்றி 2011 இல் கிடைத்ததால், பெரிய போட்டிக்கு ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சில இளம் வீரர்களையும் முயற்சிக்க வேண்டும்.

பாருங்கள், கோலி மற்றும் ரோகித் இருவரும் அணிக்கும் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாதித்துள்ளனர். எனவே, யாரும் அவர்களை ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் அடுத்த ஒருநாள் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எங்கு நிற்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு சில நேர்மையான மற்றும் தொழில்முறை உரையாடல்கள் இருக்கும். அது அதைப் பொறுத்தே எல்லாம் அமையும்” என்று கூறப்பட்டது.

1 More update

Next Story