பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஆக்கி அணி
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை ஆகஸ்ட் 1ம் தேதி எதிர்கொள்கிறது.
பாரீஸ்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல் (11 மற்றும் 19வது நிமிடம்) அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணி இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 டிரா கண்டு 7 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை ஆகஸ்ட் 1ம் தேதி எதிர்கொள்கிறது.