மீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்


மீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்
x

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்‌ஷய்குமார், அமீர்கான், சல்மான்கான், அஜய்தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் என்று பலரது படங்கள் குறைந்த பட்ச தயாரிப்பு செலவை கூட வசூல் செய்ய முடியாமல், பெரும் இழப்பை ஏற்படுத்தின.

ஒரு காலத்தில் உலக அரங்கில் இருந்து இந்திய சினிமா என்றாலே, பாலிவுட்டை நோக்கிதான் கையை நீட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அந்த கைகள், தென்னிந்திய சினிமாக்களின் பக்கம் திசை திரும்பியிருக்கிறது. அதற்கு காரணம், தென்னிந்தியாவில் இருந்து உருவான 'பாகுபலி', 'கே.ஜி.எப்.', 'ஆர்.ஆர்.ஆர்.', 'புஷ்பா' ஆகிய திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் அதே ரூ.100, ரூ.200 கோடிகளில், கதை, திரைக்கதை, நடிகர்களின் கலவையான நடிப்பும் இருக்க தரமான வகையில் தென்னிந்தியப் படங்கள், பாலிவுட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததன் விளைவு, பாலிவுட்டில் கதாநாயகர்களை பில்டப் செய்து எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் ரசிகர்களால் கைவிடப்பட்டன.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், அமீர்கான், சல்மான்கான், அஜய்தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் என்று பலரது படங்கள் குறைந்த பட்ச தயாரிப்பு செலவை கூட வசூல் செய்ய முடியாமல், பெரும் இழப்பை ஏற்படுத்தின.

அதே நேரத்தில் 'ஆர்ட்டிக்கல் 15', 'அனந்தகன்' போன்ற அற்புதமான படங்களும் வரத்தான் செய்தன. ஆனால் அவை சிறிய பட்ஜெட் படங்களாக அமைந்து, பெரிய பட்ஜெட் படங்கள் பேரிழப்பை ஏற்படுத்திய காரணத்தால், பாலிவுட் சினிமா கடந்த சில வருடங்களாக தலைநிமிர முடியாமல் தவித்து வருகிறது.

மீண்டும் பாலிவுட்டை தலைநிமிரச் செய்யும் நோக்கில், பாலிவுட் நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் பல முயற்சிகளைச் செய்து பார்த்தும், எதுவும் கைகொடுக்கவில்லை. தென்னிந் தியாவில் இருந்து உருவான 'பாகுபலி' படத்தைப் போன்று பிரமாண்டமான போர் காட்சிகள் நிறைந்த வரலாற்றுப் படங்களை எடுக்க முயன்றனர். அக்ஷய்குமார் நடிப்பில் 'சாம்ராட் பிருத்விராஜ்', 'ஷாம்சேரா' ஆகிய படங்கள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இதில் ரூ.300 கோடியில் எடுக்கப்பட்ட 'சாம்ராட் பிருத்விராஜ்' ரூ.90 கோடியையும், ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்ட 'ஷாம்சேரா' ரூ.60 கோடியையும் வசூலித்து படுதோல்வியை சந்தித்தன.

தென்னிந்திய சினிமாக்களை பாலிவுட் ரசிகர்கள் விரும்புவதால், தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களையே, பாலிவுட்டில் ரீமேக் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அப்படி ரீமேக் செய்யப்பட்ட பல படங்கள் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கைதி' திரைப்படத்தை 'போலே' என்ற பெயரில் எடுத்தனர்.

அதே போல் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தை 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'டிரைவிங் லைசென்ஸ்' என்ற படத்தை 'செல்பி' என்ற பெயரில் எடுத்தனர். ஆனால் இந்தப் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கின்றன.

சினிமா தொடங்கிய காலம் தொட்டே ஒரு மொழியில் எடுக்கப்படும் சினிமா, மற்றொரு மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம்தான். அந்த காலத்தில் படங்கள் அனைத்து மொழிகளிலும் வெற்றிபெறவும் செய்தன. அதற்கு காரணம், ஒரு மொழியில் வெற்றிபெற்ற படத்தை, மற்றொரு மொழியில் எடுக்கும்போது, அந்த கதையின் தரம் குறையாமல், திரைக்கதை அமைப்பு சிதையாமல் எடுத்ததால், அவை அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றன.

ஆனால் இப்போது ரீமேக் செய்பவர்கள், தங்களின் ரசிகர்கள் இப்படி தான் எதிர்பார்ப்பார்கள் என்று கருதி, கதாநாயகர்களுக்கு பில்டப் காட்சிகளை சேர்க்கிறேன் என்று, கதையையும், திரைக்கதையையும் சிதைப்பதே படங்களின் தோல்விக்கு காரணமாக அமைகின்றன. பாலிவுட்டிலும் ரீமேக் படங்கள் படுதோல்வி அடைய இதுவே காரணம்.

தமிழில் லோகேஷ் கனகராஜ், சினிமாட்டிக் யுனிவெர்சல் திரைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். கைதி, விக்ரம் என்று தொடரும் இந்த திரைக்களத்தையும், பாலிவுட் கையாளத் தொடங்கியிருக்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு, பாலிவுட்டில் வெற்றிபெற்ற படமாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' படம் பார்க்கப்படுகிறது. இதில் ஷாருக்கான் ராணுவ உளவாளியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு, சல்மான்கான் நடிப்பில் வெளியான 'டைகர்' படத்தின் கதாபாத்திரத்தை உள்ளே நுழைத்திருந்தார்கள். 'டைகர்' படமும் ராணுவ உளவாளியைப் பற்றிய கதைதான். 'டைகர்' படத்தின் மூன்றாம் பாகத்தில், 'பதான்' படத்தின் நடித்த ஷாருக்கானின் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஹிருத்திக்ரோஷன் நடிப்பில் வெளியான 'வார்' படமும், ராணுவ உளவாளி சம்பந்தப்பட்டதுதான் என்பதால், மூன்று படங்களையும் ராணுவ உளவாளிகளின் சினிமாட்டிக் யுனிவெர்சல் களமாக உருவாக்க, பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த முயற்சி எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நவாசுதீன் சித்திக் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட்டின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் என்று சில விஷயங்களைச் சொல்லியிருந்தார்.

"பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான், திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன. பலகோடியில் தயாராகும் அதுபோன்ற படங்களில் 5 பாடல்கள் இருக்கின்றன. அதற்கான நடனத்தை நடன இயக்குனர் கவனித்துக் கொள்கிறார். சில ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதை ஸ்டண்ட் இயக்குனர் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படத்தில் கதை, நடிப்பு என்று எதுவும் இருப்பதில்லை.

இப்படி மக்கள் விரும்பாத படங்களுக்கு பல நூறு கோடிகளை செலவு செய்வதால்தான், அவை தோல்வியை தழுவுகின்றன. நல்ல கலைஞர்களை வைத்து ரூ.50 கோடியில் எடுத்தால் கூட அந்தப் படம் வெற்றிபெறும். ஆனால் அதற்கு முன்னணி நடிகர்கள் தயாராக இருக்கிறார்களா?.

அரிதாக ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அடைகின்றன. ஆனால் அது 3 சதவீத வெற்றி மட்டுமே. மீதமிருக்கும் 97 சதவீத படங்களின் தோல்விக்கு, பெரும் பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள்தான் காரணம்" என்று கூறியிருக்கிறார்.

நவாசுதீன் சித்திக் சொல்லியிருக்கும் தவிர்க்க முடியாத இந்த காரணத்தை, பாலிவுட் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாக்களுமே கொஞ்சம் கவனத்தில் கொள்வது அவசியம்தான்.


Next Story