தீபாவளியன்று மழை பெய்யுமா? - வெளியான தகவல்
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மழை இருக்குமா? என்ற கேள்வி, மக்கள் மத்தியிலும், தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ந்தேதி உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக 23-ந்தேதி வலுப்பெற்று, அதன் பின்னர் வடக்கு ஆந்திரா-வங்காளதேசம் இடையே கரையை கடக்க உள்ளது.
பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும். தமிழ்நாட்டில் இந்த புயலால் ஈரப்பதம் அனைத்தும் இழுக்கப்பட்டு, வறண்ட காற்றே இருக்கும். இதனால் 22-ந்தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடைகாலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதிக்கு பிறகே வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தொடங்குகிறது. எனவே இடைப்பட்ட நாட்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவே. எனவே இந்த ஆண்டு மழை இல்லாமல் தீபாவளி பண்டிகை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.