டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட் கோலி..? வெளியான தகவல்


டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட் கோலி..? வெளியான தகவல்
x

image courtesy:PTI

டி20 உலகக்கோப்பை தொடருக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்ட இந்திய அணியுடன் விராட் கோலி செல்லவில்லை.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக நியூயார்க்கில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இரு பிரிவாக அமெரிக்கா செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி தலைமை பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் நேற்று இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக நியூயார்க் சென்றனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியின் 2-வது பிரிவினர் நாளை ( 28- புறப்பட்டு செல்கிறார்கள்.

இதனிடையே ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் நேற்றே அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இது குறித்து பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ., " விராட் கோலியின் விசா ஆவணங்கள் தொடர்பான வேலைகள் நிலுவையில் உள்ளன. இதனாலேயே அவர் நேற்றைய அணியுடன் செல்லவில்லை. விசா தொடர்பான வேலை முடிவடைந்ததும் அவர் வரும் 30-ம் தேதி நியூயார்க் செல்வார்" என்று கூறியது. இதனால் விராட் கோலி வருகிற ஜூன் 1-ந் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story