தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
கேரளாவில் வழக்கமான பருவமழை அவ்வப்போது விட்டுவிட்டு தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
நேற்று இரவு முதல் வயநாட்டில் மழை இல்லை, கேரள மாநிலம் முழுவதும் தற்போது தெளிவான வானிலை உள்ளது. வழக்கமான பருவமழை அவ்வப்போது விட்டுவிட்டு தொடரும். வயநாடு, நீலகிரி மற்றும் வால்பாறையில் மிக கனமழை அச்சுறுத்தல் இல்லை. அதேசமயம், சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு பிறகு இன்று மழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேனின் இந்த தகவல் சென்னை மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi