பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் - சமீர் வான்கடேவின் மனைவி போலீசில் புகார்


பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் - சமீர் வான்கடேவின் மனைவி போலீசில் புகார்
x

சமீர் வான்கடேவின் மனைவியான பிரபல நடிகை கிராந்தி ரெட்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பை,

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக செயல்பட்டவர் சமீர் வான்கடே. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன்கான் கைது செய்யப்பட்டான். 26 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன்கான் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டான். பின்னர், 2022 மே மாதம் ஆர்யன்கான் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. அதேவேளை, இந்த விவகாரத்தில் ஷாருக்கானிடம் பணம் பறிக்க சமீர் வான்கடே முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மகனை விடுதலை செய்ய நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சமீர் வான்கடே மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சமீர் வான்கடே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி ரெட்கர். பிரபல மராட்டிய நடிகையான கிராந்தி திரைப்பட இயக்குனராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி ரெட்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் தொலைபேசி எண், இங்கிலாந்து தொலைபேசி எண்களில் இருந்து தனது செல்போனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாக கிராந்தி மும்பையில் உள்ள கொரிஹன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மிரட்டல் வந்துள்ள செல்போன் எண்கள் குறித்த விவரத்தையும் கிராந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிராந்தியின் புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story