இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு - நீதிபதி விலகல்


இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு - நீதிபதி விலகல்
x

கோப்புப்படம் 

இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

சென்னை,

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும் கூட காப்புரிமை பெறாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக கூறி எக்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் ஏற்கெனவே, வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இந்த பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமையும் இருக்கிறது என்று தீர்ப்பளித்தார். 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனமும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அறிவித்தார். அதோடு இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story