போலீஸ் பாதுகாப்பை மீறி ரஜினி படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு
ரஜினி படப்பிடிப்பில் போலீஸ் பாதுகாப்பை மீறி திரண்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தின் அருகே நடந்து வருகிறது. அங்குள்ள தென் பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்தை காணும் ஆர்வத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். படப்பிடிப்பு அரங்கில் இருந்து வெளியே வரும் ரஜினியை முற்றுகையிட்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்புகின்றனர். அவர்களை பார்த்து ரஜினி கையசைத்தார். கூட்டத்தினரை தாண்டி காருக்கு செல்ல ரஜினிக்கு சிரமமாக இருந்தது. படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தினமும் அதிக ரசிகர்கள் திரள்வதால் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், படப்பிடிப்பை வேறு இடத்துக்கு மாற்றலாமா என்று படக்குழுவினர் யோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்கிறார். இதில் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், விநாயகன், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.