நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' பட டிரெய்லர் வெளியானது


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பிரபாஸின் கதாபாத்திரப் பெயர் இதில் பைரவா. பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் அறிமுக விழா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்கான் நிகழ்வில்தான் நடந்தது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.


படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார். "மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்" என்றார்.

இதில் நடிகர் பிரபாஸ் உடன் புஜ்ஜி என்ற காரும் படத்தில் பயணம் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொன்னது போலவே கதை மகாபாரதக் காலத்தில் இருந்து துவங்குகிறது. தீபிகா, அமிதாப்பின் தோற்றங்கள் மிரட்டுகிறது. டிரைய்லர் இறுதியில் வில்லனாக கமலின் எண்ட்ரி மாஸ் கூட்டுகிறது. ஜூன் 27-ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.


Next Story
  • chat