சிலம்பம் சுழற்றி சாதனை செய்த நிறைமாத கர்ப்பிணி
கற்கத் தொடங்கிய சில மாதங்களில் நான் கருவுற்றேன். எனினும் சிலம்பத்தை விடாமல் கற்கத் தொடங்கினேன். கற்பது மட்டுமல்லாமல், சிலம்பத்தில் ஏதேனும் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது.
நாமக்கல் மாவட்டம் தூசூரைச் சேர்ந்தவர் சினேகா. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். அவருடைய பேட்டி...
"கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணம் நடந்தது. கணவர் நவீந்த், சிலம்ப விளையாட்டுப் பயிற்சியாளராக இருக்கிறார். அவரும், அவரது நண்பர்களும் இணைந்து சிலம்பப் பயிற்சி அமைப்பை நிறுவி, சிலம்பம் கற்பித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக எனக்கும் சிலம்பம் முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனது கணவரிடம் சிலம்பம் கற்கத் தொடங்கினேன்.
கற்கத் தொடங்கிய சில மாதங்களில் நான் கருவுற்றேன். எனினும் சிலம்பத்தை விடாமல் கற்கத் தொடங்கினேன். கற்பது மட்டுமல்லாமல், சிலம்பத்தில் ஏதேனும் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தாலும், நம்மால் முடிந்த ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்குத் துணையாக இருந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
கர்ப்பகாலத்தில் மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஏற்படும். எனினும் அதையும் கடந்து சிலம்பத்தில் சாதனை செய்ய வேண்டும் என்று முழுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டேன்.
முதலில் பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்கள் என்று மெல்ல மெல்ல பயிற்சி மேற்கொண்டு, பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து இரட்டைக் கம்பு சுற்றப் பயிற்சி மேற்கொண்டேன். படிப்படியாக பயிற்சி மேற்கொண்டதால் எனக்கு இது சாத்தியமானது.
இந்தச் சாதனை செய்யும் தகவலை குடும்பத்தாருக்குத் தெரிவித்தபோது அனைவரும் அச்சம் கொண்டனர். ஆனால் நானும், எனது கணவரும் எந்தவித பயமும் கொள்ளாமல், முறையாக பயிற்சிகள் மேற்கொள்ளும் பொழுது இது சாத்தியம் என்பதில் உறுதியாக இருந்தோம். பலரும் எங்களின் இந்த முயற்சியை அக்கறை கொண்டு கண்டித்தனர்.
எனினும் நாங்கள் இதில் உறுதியாக இருந்தோம். என்னைக் காட்டிலும் என் கணவரே அதிக எதிர்ப்புகளை சந்தித்தார். கணவரும், அவரது நண்பர்களும் இந்தச் சாதனையை நான் செய்வதற்கு எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள்.
ஒரு வழியாக பல தடைகளைத் தாண்டி, ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி எனது சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றினேன். இதை பலரும் வியந்து பாராட்டினர்.
நான் காதல் திருமணம் செய்துகொண்டதால், என் குடும்ப உறவினர்களிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தச் சாதனையைக் கண்டு என் உறவினர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினர்.
பாராட்டுகள் ஒரு புறம் வந்தாலும், மறுபுறம் பல அச்சுறுத்தல்களும் வந்தன. கர்ப்பிணிப் பெண் இவ்வாறு சிலம்பம் சுற்றுவது மிகத் தவறு என்று பேசினர். இறைவனின் துணையால் சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்.
மேலும் மீண்டும் இந்த சிலம்பப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன்.
என் கணவரோடு இணைந்து கலைகள் பலவற்றைக் கற்பிக்கும் கலைக்கூடம் அமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இக்காலத்தில் தற்காப்புக்கு மட்டும் அல்லாமல் நமது உடல்நலத்தை பேணுவதற்காகவும் சிலம்பம் கற்பது அவசியமாகும். சிலம்பம் கற்பதால் உடலும், மனமும் வலுவடையும். சமூகத்தில் தன்னம்பிக்கை மிகுந்தவராகத் திகழ்வோம்.
பெண்களுக்கு நான் கூற விரும்புவது, நாம் நமது பாரம்பரியக் கலையை ஆண்-பெண் என்ற பேதமின்றி கற்று, நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பெண்கள் மிகுந்த பங்காற்ற வேண்டும்.
அதேசமயம் கருவுறுதல் மற்றும் குழந்தை பெற்று எடுத்தல் போன்ற இயற்கையான செயல்களில் நமக்குள் இருக்கும் அச்சத்தை அகற்ற வேண்டும். முறையான மற்றும் பாதுகாப்பான பயிற்சி மேற்கொண்டால் எதுவும் சாத்தியம் என்பதை உணர வேண்டும்.
சிலம்பத்தில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, சுருள் வாள், மான் கொம்பு, அடி வரிசை, குத்து வரிசை, வீடுமுறை பாடங்கள் போன்று பல பிரிவுகள் உள்ளன. இதில் நான் தற்பொழுது ஆரம்ப நிலையில் தான் உள்ளேன். இன்னும் கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது.
இந்தச் சாதனையை செய்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தாலும், எனக்குள் இருந்த தன்னம்பிக்கையால் இது சாத்தியமானது.
ஒரு கட்டத்தில் மறைந்து கொண்டிருந்த சிலம்பக்கலை, இன்று மீண்டும் உயிர்ப்பெற்று வளர்கிறது. இதை நம்மால் முடிந்த வரையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story