குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நந்தினி
நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒவ்வொன்றும், தங்களை பிரதிபலிப்பதாக உள்ளது என அவர்கள் கூறும்போது, சாமானிய மக்களிடம் என் கருத்தைக் கொண்டு சேர்த்ததில் ஓரளவு வெற்றி பெற்றதாக உணர்கிறேன்.
சாமானிய மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களையும், எளிமையான மற்றும் யதார்த்தமான தனது நடிப்பின் மூலம், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்களின் வழியாக மக்களிடையே கொண்டு சேர்த்தவர் நந்தினி. ‘பிளாக் ஷீப்’ நந்தினி மற்றும் ‘இவள்’ நந்தினி என அடையாளப்படுத்தப்படும் இவர், தான் நடித்த ‘சேல்ஸ் கேர்ள்’ குறும்படத்தில் துணிக்கடையில் பணிபுரியும் பெண்களின் சிரமத்தையும், ‘தூய்மையின் காவலர்கள்’ குறும்படத்தில் துப்புரவு பணியாளர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையையும் பதிவு செய்துள்ளார். ‘அக்கா கடை' குறும்படத்தில் ரோட்டுக் கடையில் உணவு விற்பவர்களின் கண்ணியத்தையும், ‘குண்டச்சி' என்ற குறும்படத்தில், குண்டான தனது உடல் அமைப்பை ஏளனம் செய்பவர்கள் மத்தியில் துணிச்சலாக வாழும் பெண்ணின் தைரியத்தையும் கண்முன்னே கொண்டு வந்தார். இது மட்டுமின்றி, மேலும் பல நல்ல கருத்துகளை குறும்படங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். சிறந்த நடிப்பிற்கு உருவமும், உடல்வாகுவும் அவசியமில்லை என்பதை முழுமையாக நம்புவது மட்டுமில்லாமல், அதை அனைவருக்கும் வெளிக்காட்டிய நந்தினியின் சுவாரஸ்யமான பேட்டி..
உங்களைப் பற்றி?
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். அப்பாவும், அண்ணனும்தான் என்னை வளர்த்தனர். சிறு வயதில் இருந்தே என்னைச் சுற்றி உள்ளவர்களை, குறிப்பாக பெண்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். சமுதாயத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களை சாதாரணமாகப் பார்ப்பதைத் தவிர்த்து, அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் என்ன? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதைத் தொடர்ந்து எழுத்தாளராக பயணத்தைத் தொடங்கி, பின்பு குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
உங்கள் முதல் குறும்பட அனுபவம் எப்படி இருந்தது? நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த குறும்படம் எது?
முதன் முதலில் கேமரா முன்னால் நின்றபோது பயம் வரவில்லை. இயல்பாகவே நடித்தேன். நான் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் மனதை வெகுவாய் பாதித்தது திருநங்கைகளைப் பற்றிய குறும்படம். அதற்காக தயாரானபோது, அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, அவர்களுடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாழ்வில் படும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தினேன். திருநங்கைகளின் அவலநிலை மாற வேண்டும் என்று நினைத்தேன்.
குறும்படத்தில் நடிக்கும்போது அல்லது அதனை உருவாக்கும்போது, மக்களிடையே அதன் கருத்துகள் சென்றடைய வேண்டும் என்று எண்ணுவேன். சமீபத்தில் ‘மீடியா கேர்ள்' எனும் தலைப்பில் செய்தியாளர் ஒருவர், தனது கணவர் இறந்த செய்தியை, செய்தியின் வாயிலாக வாசிப்பது போன்ற ஒரு குறும்படத்தில் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் நடித்தேன். அந்த நடிப்பு எனக்கு நிறைவைத் தந்தாலும், மக்களிடம் முறையாக போய்ச் சேருமா? இதனை எப்படி புரிந்துகொள்வார்கள்? என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல், செய்தி வாசிப்பவர்களும் என்னை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியது நாங்கள் எதிர்பாராத ஒன்று.
உங்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய குறும்படம் எது?
‘தூய்மை காவலர்’ எனும் குறும்படம் மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூய்மை பணியாளர்களைப் பார்க்கும்போதும், பழகும்போதும் மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களிடம் சகஜமாகவும், சமமாகவும் பழக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
மக்களிடம் உங்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறுங்கள்?
நான் எங்கு சென்றாலும், என்னைப் பார்ப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து, சகோதரியைப் போல என்னிடம் வந்து பேசுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. மேலும், நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒவ்வொன்றும், தங்களை பிரதிபலிப்பதாக உள்ளது என அவர்கள் கூறும்போது, சாமானிய மக்களிடம் என் கருத்தைக் கொண்டு சேர்த்ததில் ஓரளவு வெற்றி பெற்றதாக உணர்கிறேன்.
சினிமாவில் நடிப்பதற்கும், குறும்படத்தில் நடிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?
குறும்பட படப்பிடிப்பில் உடன் நடிப்பவர்கள், நான் ஏற்கனவே பழகிய முகங்கள். ஆனால், சினிமாவில் நடிக்கும்போது என்னுடன் நடிப்பவர்கள் முற்றிலும் புதிய முகங்கள் மற்றும் பிரபலங்கள் என்பதால், என்னை அறியாமலே பயபக்தி தானாக வரும். சினிமாவில் கதாநாயகிகளுக்கான கண்ணோட்டம் மாறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியதுண்டு. அது தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இன்று கதாநாயகிகளின் உடல்வாகு மற்றும் நிறத்தை மட்டும் கருத்தில்கொள்ளாமல், நடிப்புத் திறமையையும் கருத்தில் கொண்டு படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
சமூகத்தில் மற்றவர்களின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து என்ன?
உடல் அமைப்பு மற்றும் வெளிப்புற அழகைப் பற்றி விமர்சிப்பது மிகவும் தவறான செயல். இந்த உலகத்தில் எல்லோரும் தனிப்பட்ட முறையில் அழகானவர்கள் தான். ஒருவருக்கு அழகாய் தோன்றாதது, மற்றவருக்கு அழகாய் தோன்றும். இதில் விமர்சிக்க எதுவுமே இல்லை. மற்றவரின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆர்வமும், திறமையும் இருந்தும், தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே எண்ணி தயங்கும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
உங்களிடம் உள்ள குறைகளை பெரிதாக நினைக்காதீர்கள். நான் உயரம் குறைவாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன், பருமனாக இருக்கிறேன் என்று உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொள்வதை முதலில் நிறுத்துங்கள். சாதிப்பதற்கு வெளிப்புற தோற்றம் முக்கியமில்லை. இது நடிப்புக்கு மட்டுமில்லாமல், அனைத்திற்குமே பொருந்தும். உங் களுக்குப் பிடித்த பணியைச் செய்யத் தொடங்குங்கள். யூகங்களையோ, தோல்வியைப் பற்றிய பயத்தையோ உருவாக்காதீர்கள். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என நினைத்து இலக்கை நோக்கி முன்னேறுங்கள். வெற்றி ஒருநாள் உங்கள் வசப்படும்!
Related Tags :
Next Story